

மியான்மர் நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்க, ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.மியான்மர் நாட்டில், பல ஆண்டுகளாக, ராணுவ ஆட்சி நடக்கிறது. நோபல் பரிசு பெற்ற மியான்மர் நாட்டின் ஜனநாயகத் தலைவர் அவுங் சான் சூச்சி, கடந்த 90ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற போதும், அவரை ஆட்சியில் அமர விடாமல், வீட்டுச் சிறையில் அடைத்து வைத்தது ராணுவ அரசு. இதனால், உலக நாடுகள், மியான்மர் மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ளன.
இதற்கிடையே, கடந்த 2010ல் நடந்த தேர்தலில், அதிபராக தீன் சீன் பதவி ஏற்றார். சமீப காலமாக, இவரது ஆட்சியில், ஜனநாயக நடைமுறைகள் தலைகாட்டத் துவங்கியுள்ளன.கடந்த மாதம் நடந்த இடைத்தேர்தலில், அவுங் சான் சூச்சி அமோக வெற்றி பெற்றுள்ளார். அடுத்த வாரம், அவர் பார்லிமென்டுக்குள் நுழைய உள்ளார். இதைத் தொடர்ந்து, மியான்மர் மீதான பொருளாதாரத் தடையைத் தளர்த்த, மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டுள்ளன.ஏற்கனவே, சில தடைகளைத் தளர்த்த, ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. அமெரிக்காவும், விரைவில் பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தி, மியான்மருடன் தூதரக உறவுகளைப் புதுப்பிக்க உள்ளது.
இதற்கிடையே ஐரோப்பிய நாடுகள், மியான்மர் மீதான தடைகளை ஓராண்டுக்கு அகற்ற, கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளன. ராணுவ உதவியைத் தவிர்த்து, மற்ற அனைத்துத் தடைகளையும் நீக்க, ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது.ஐரோப்பிய நாடுகள், மியான்மர் மீது, கடந்த 96ம் ஆண்டு முதல் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன. தற்போது, இந்த தடை விலக்கப்பட உள்ளதால், மீண்டும் மியான்மருடனான வர்த்தக உறவும், தூதரக உறவும் புதுப்பிக்கப்பட உள்ளன.
