

பனிமலைகள் நிறைந்த அண்டார்டிகா கண்டத்தில் இந்தியா, தனது மூன்றாவது ஆய்வு மையத்தை ஆரம்பித்து சோதனை ரீதியாக செயற்படத் தொடங்கியுள்ளது.உலகின் தென்பகுதியான அண்டார்டிகாவில் பல்வேறு நாடுகள் ஆய்வு மையம் அமைத்து பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன.இதில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் அங்குள்ள லார்சிமேன் பனி மலைப் பகுதியில் இந்தியாவின் மூன்றாவது ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் சைலேஷ் நாயக் கூறியிருப்பது, ஆய்வு மையத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டன. “பார்தி” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வு மையம் நவம்பரில் முறைப்படி திறந்து வைக்கப்படும்.இந்தியா அறிவியல் ரீதியாக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை இதுபோன்ற ஆய்வு மையங்கள் சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக்காட்டும். ராஜேஷ் அஸ்தனா தலைமையிலான 15 பேர் அடங்கிய குழு இப்போது அங்கு முகாமிட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்பு, கடந்த 1988-89 இந்தியா சார்பில் “மைத்ரி” என்ற ஆய்வு மையம் அண்டார்டிகாவில் அமைக்கப்பட்டது. இதில் இருந்து சுமார் 3 ஆயிரம் கி.மீ. தொலைவில் புதிய ஆய்வு மையம் உள்ளது.மைத்ரி மையத்தில் கோடை காலத்தில் 70 பேரும், பனிக் காலத்தில் 25 பேரும் தங்கி ஆய்வு செய்து வருகின்றனர். முன்னதாக 1983ம் ஆண்டில் இந்தியா முதற்முதலாக அண்டார்டிகாவில் தட்சண கங்கோத்ரி என்ற முதல் ஆய்வு மையத்தை அமைத்தது.ஆனால் அது பனியில் மூழ்கிவிட்டது. நடப்பு பட்ஜெட்டில் துருவப் பகுதி ஆய்வுக்கென்று மத்திய அரசு ரூ.290 கோடி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
