

அல் - காய்தா பயங்கரவாதிகளின் கோட்டை எனக் கருதப்படும் தெற்கு யேமனில் திடீரென அரசுப் படைகள் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் 25 பயங்கரவதாதிகள் கொல்லப்பட்டனர். இதனை அதிகாரபூர்வ தகவல் ஒன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது.ஜின்ஜிபார் புறநகர்ப் பகுதியில் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டை நிறுவுவதில் அரசு ராணுவம் வெற்றி கண்டிருப்பதாகவும், அதேநேரத்தில் இந்தப் பகுதி தவிர மற்ற தெற்குப் பகுதிகள் அனைத்தும் அல்-காய்தா வசம்தான் இப்போதும் உள்ளதாகவும் அதிகாரி கூறினார்.
ராணுவ அமைச்சக வட்டாரங்கள் கூறிய தகவல்கள்:
தெற்கு அப்யான் மாகாணத்தில் 2 வாரங்களுக்கு முன்பே தாக்குதலை ராணுவம் தொடங்கிவிட்டது. இதுவரை 250 அல்-காய்தா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலின்போது, 37 யேமன் வீரர்களும் பலியாயினர்.யேமன் அதிபராக இருந்த அலி அப்துல்லா சலேவின் ராஜிநாமாவை தொடர்ந்து ஏற்பட்ட அதிகார வெற்றிடத்தைப் பயன்படுத்திக்கொண்ட அல்-காய்தா பயங்கரவாத இயக்கம் தெற்கு யேமனில் அதிகாரம் செலுத்தத் தொடங்கியது.
அமெரிக்காவின் கருத்துப்படி யேமனில் உள்ள அல்-காய்தா பிரிவு மிக பயங்கரமானதாகும். இந்தப் பிரிவு அமெரிக்காவுக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளது. சமீபகாலமாக யேமன் ராணுவம் தரை மார்க்கமாகவும் வான் வழியாகவும் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வருகின்றன.அதேநேரத்தில் அல் - காய்தாவும் அரசுப் படைகளுக்கு எதிராக திடீர்த் தாக்குதல்களை நடத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. இருந்தாலும், யேமன் அரசு தனது உறுதியை வெளிப்படுத்தியுள்ளது என்று ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.
"பயங்கரவாதத்துக்கு எதிரான போர் மேலும் விரிவடையும். அது அனைத்து பயங்கரவாத அம்சங்களையும் எதிர்க்கும். பயங்கரவாதத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்க்கும் வரை இந்தத் தாக்குதல் தொடரும்' என உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.யேமனின் புதிய அதிபராக அபேத் ரப்போ மன்சூர் ஹாடி பொறுப்பேற்றதற்குப் பிறகு, இப்போது பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
