

மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்தும், தந்தை மன்னிக்காததால் 12 ஆண்டுகளாக சிறையில் மகன் காத்துக் கொண்டிருக்கிறார். சவுதி அரேபியாவில் வசிப்பவர் ஈத் அல் சினானி. இவர் தனது வளர்ப்பு தாய் முசாப் அல் ஜரானியை சரமாரியாக அடித்து விட்டார்.இதுகுறித்து தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், சினானியை கைது செய்த பொலிசார் கடந்த 1997ஆம் ஆண்டு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால் சினானிக்கு 3 ஆண்டு சிறை, 200 கசையடி என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
அப்போது மகனின் தண்டனை காலம் முடிந்தாலும், தான் மனம் மாறும் வரை அவனை சிறையிலேயே வைத்திருக்க வேண்டும் என்று தந்தை கேட்டுக் கொண்டார். அதன்படி 3 ஆண்டு சிறை தண்டனை முடிந்த பிறகும் 12 ஆண்டுகளாக தந்தையின் மன்னிப்புக்காக காத்திருக்கிறார் சினானி.என் மீது புகார் கொடுத்த தந்தை மன்னித்தால் மட்டுமே சிறையில் இருந்து என்னால் வெளியில் வர முடியும் என்று சினானி கூறுகிறார். இந்நிலையில் சவுதி அரேபிய சமூக தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தந்தையை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
சவுதியில் சட்டங்கள் இருந்தாலும், மதச் சட்டங்களின் அடிப்படையில் நீதிபதி ஒருவர் முடிவெடுத்து தண்டனை வழங்க முடியும். அதனால் தந்தையின் வேண்டுகோளை ஏற்ற நீதிபதி, சினானியை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
