

வீரர்கள் தேர்வில், கப்டன் தோனி பாரபட்சமாக செயல்படுவதாக சந்தேகம் எழுகிறது,'' என, கபில் தேவ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்ற இந்திய அணி டெஸ்ட், "20-20' மற்றும் ஒருநாள் போட்டிகள் என, பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் தோற்று திரும்பியது. பின், இந்தியா வந்த இங்கிலாந்து அணியை, வீழ்த்தியது.
அடுத்து வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் மீண்டும் சொதப்பியது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியது: அணியின் கேப்டன் என்பவர் களத்தில் தலைமைப் பண்பு உட்பட அனைத்து திறமையும் வெளிப்படுத்த வேண்டும். இந்திய அணி கேப்டன் தோனியின் நடவடிக்கைகள் பல, சந்தேகத்துக்கு இடமாகவும், பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.
இங்கிலாந்து மண்ணில் ஆர்.பி. சிங்கை தேர்வு செய்தது ஏன்? செய்த தவறுகளையே திரும்ப, திரும்ப செய்தாலும், ரெய்னாவுக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்பு கொடுப்பது ஏன்? இவை அனைத்தையும் விட, ஆஸ்திரேலியா சென்ற அணியில் இடம் பெற்றிருந்த மனோஜ் திவாரியை ஒரு போட்டியில் கூட ஏன் களமிறக்காததற்கு காரணம் என்ன? இந்த கேள்விகளுக்கு தோனி பதில் சொல்ல வேண்டும்.
இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு, முன்னாள் வீரர் கங்குலி பொருத்தமாக இருப்பார். ஆனால், வேறு யார் வந்தாலும் சரி, கங்குலி பயிற்சியாளராக வருவதை இந்திய வீரர்கள் விரும்ப மாட்டர். ஏனெனில், அணியின் நடவடிக்கைகளில் இவர் அதிகம் தலையிடுவார் என்று அவர்கள் நினைக்கின்றனர். வெளிநாட்டு பயிற்சியாளர்களை விட்டுவிட்டு, இந்திய வீரர்களையே இப்பதவிக்கு நியமிக்க வேண்டும். இதை கங்குலியில் இருந்து துவங்கலாமே. இவ்வாறு கபில் தேவ் தெரிவித்தார்.
கபில்தேவ் கருத்து குறித்து இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் கெய்க்வாட் கூறுகையில், கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு. இதில் கப்டனை மட்டும் ஏன் குற்றம் சுமத்த வேண்டும். எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தும் திறமையான போலர்கள் நம்மிடம் இல்லை. ஜாகிர் கானைத் தவிர, வேறு யார் சீராக 3 அல்லது 4 விக்கெட் வீழ்த்தும் திறன் பெற்றுள்ளனர். அணியின் போலிங், பட்டிங்கில் இப்படி சிக்கல் உள்ள நிலையில், தோனிக்குப் பதில் யார் கப்டனாக இருப்பார். இப்படி கப்டன், பயிற்சியாளரை குற்றம் சுமத்துவதை விட்டுவிட்டு, தோல்விக்கான காரணங்களை கண்டறிய வேண்டும்,'' என்றார்.
