

கடந்த 2010ல், டில்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில், 6,388 போலி மாணவ விசா விண்ணப்பங்கள் வந்திருந்ததாக, பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.பிரிட்டனில் படிப்பதற்காக விசா கோரும் விண்ணப்பங்கள் அதிகளவில் குவிந்ததால், இந்தியாவின் வடபகுதி மற்றும் நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வரும் மாணவ விசா விண்ணப்பங்களை பரிசீலிப்பதை நிறுத்தி வைக்கப் போவதாக, 2010, பிப்ரவரியில், பிரிட்டன் பார்டர் ஏஜன்சி தெரிவித்திருந்தது.
இத்தடை அதே ஆண்டு, ஆகஸ்டில் விலக்கிக் கொள்ளப்பட்டது.அதே நேரம், 2010ல் தான் மிக அதிகளவில் போலி விசா விண்ணப்பங்கள் வந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.இதுகுறித்து, பிரிட்டனின் தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:கடந்த 2010ல், டில்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் மட்டும், 6,388 போலி மாணவ விசா விண்ணப்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதுவே 2009ல், 2,153 போலி விண்ணப்பங்கள் தான் வந்திருந்தன.கடந்த 2009ல் இருந்து, மொத்தம் 50 ஆயிரம் ஐரோப்பியர்கள் அல்லாதோரின் போலி மாணவ விசாக்கள் கண்டறியப்பட்டுள்ளன. முக்கிய கட்டுப்பாட்டு விதிகள் சேர்க்கப்படும் முன்னரே, மாணவ விசாவை, பிரிட்டன் பார்டர் ஏஜன்சி அமல்படுத்தியது தான், இந்த போலி விண்ணப்பங்கள் அதிகரித்ததற்குக் காரணம்.
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் விண்ணப்பங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் இவற்றின்படி, இந்த 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான விண்ணப்பதாரர்கள், படிப்பு என்ற பெயரில், மாணவ விசா எடுத்துக் கொண்டு, வேலைக்காக பிரிட்டனுக்குள் வந்துள்ளனர்.மிக அதிகளவிலான போலி விண்ணப்பங்கள், இஸ்லாமாபாத், டில்லி, தாகா மற்றும் சென்னையில் கண்டறியப்பட்டுள்ளன.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
