

தங்களுக்கு சொந்தமான பாக்லாந்து தீவை பிரிட்டன் கைப்பற்றி வைத்துள்ளது என அர்ஜென்டினா தொடர்ந்து பிரிட்டன் அரசுடன் போரிட்டு வருகிறது.ஆனால் பிரிட்டன் அந்த தீவை கைப்பற்றியதன் 30வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.இந்நிலையில் அர்ஜென்டினா அரசு தனது 20 பெரிய வர்த்தக நிறுவனங்களிடம் பிரிட்டனிலிருந்து எந்தப் பொருளையும் இறக்குமதி செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக அந்நாட்டு அரசு ஊடகமான Telam செய்தி வெளியிட்டுள்ளது.
அர்ஜென்டினாவின் தொழில்துறை அமைச்சரான டெபோரா கியோரி வர்த்தக நிறுவன முதலாளிகளிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.மேலும் உள்ளூர் ஆதரவைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ள அர்ஜென்டினா ஜனாதிபதி கிறிஸ்டினா ஃபெர்னாண்டெஸ், பிரசாரக் கூட்டத்தை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
கிறிஸ்டினா ஃபெர்னாண்டெஸ் தனது பிரசாரத்தில், பிரிட்டன் இறக்குமதியைக் குறைப்பதால் நாட்டின் அதிகமான செலாவணி அந்நாட்டுக்குப் போகாமல் தடுப்பதாக தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, அர்ஜென்டினாவின் துறைமுகப் பட்டினமான உஷுவாவியாவுக்கு வந்த இரண்டு கப்பல்கள், பாக்லாந்துக்குப் போய் வந்ததனால் உடனே திருப்பி விடப்பட்டன.
துறைமுகத்தில் நிறுத்த இந்தக் கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைக் கேள்விப்பட்ட பிரிட்டனின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெரேமிபிரௌனி இச்சம்பவம் தனக்கு வருத்தமும் விரக்தியும் அளிப்பதாகக் கூறினார்.நாங்கள் அர்ஜென்டினாவுடன் நட்பாக இருக்க விரும்புகிறோம். அவர்களோ எங்களை வெறுக்கிறார்கள் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வருகிற ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் நாள் பிரிட்டனும், அர்ஜென்டினாவும் பாக்லாந்து போர் நடந்ததன் 30தாவது நினைவு நாளைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளன.ஆனால் பிரிட்டன் அரசு, பாக்லாந்தில் வாழும் 3000 குடிமக்களும் விரும்புகின்றவரை அந்தத் தீவு தங்களின் ஆட்சியதிகாரத்தின் கீழ் செயற்படும் என்று உறுதியாகத் தெரிவித்து விட்டது.
