

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் இல்லின் மரணத்தையடுத்து வட கொரிய கொள்கைகளில் எந்தவிதமான மாற்றங்களும் இல்லை என வட கொரிய நிர்வாகம் சர்வதேசத்திற்கு தெரிவித்துள்ளது.வடகொரியாவின் பலம் வாய்ந்த தேசிய பாதுகாப்பு ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியிலான விவேகமற்ற அரசியல்வாதிகள் மற்றும் தென் கொரியாவில் நிர்வாகத்தை மேற்கொண்டு வரும் பொம்மை அரசாங்கம் என்பன இதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கடந்த 17ஆம் திகதி மாரடைப்பு காரணமாக கிம் ஜோங் இல் மரணமானார்.
இவர் ஆட்சிப் பொறுப்பை 1994 ஆம் ஆண்டு ஏற்றதன் பின்னர் கிம் ஜோங் இல் வட கொரியாவில் இரண்டு அணு பரிசோதனைகள் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் நேற்று அமெரிக்க மற்றும் தென் கொரிய பாதுகாப்பு தலைவர்கள் வட கொரியா தொடர்பாக 20 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.