

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியிலிருந்து ஷேவாக் நீக்கப்பட்டது தொடர்பாக வேறு சில காரணங்கள் வெளியாகியுள்ளன.ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிக்கான இந்திய அணி விரர்கள் விபரம் நேற்று அறிவிக்கப்பட்டது.அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் மோசமாக விளையாடி வந்ததால் தொடக்க வீரர் ஷேவாக் அதிரடியாக நீக்கப்பட்டார் என்று கூறப்பட்டது.
ஆனால் தெரிவுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த், ஷேவாக் அணியில் இருந்து நீக்கப்படவில்லை. காயம் காரணமாக அவர் அவதிப்படுவதால் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.ஷேவாக்கும் காயம் காரணமாக ஆசிய கிண்ண போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளேன் என்று கூறினாலும், அவர் நீக்கப்பட்டது குறித்து புதிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
முத்தரப்பு ஒருநாள் போட்டியில் ஷேவாக், சச்சின், காம்பீர் ஆகிய 3 பேரை சுழற்சி முறையில் அணித்தலைவர் தோனி தெரிவு செய்தார். மந்தமான களத்தடுப்பு காரணமாகவே சுழற்சி முறை பின்பற்றப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.தோனியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஷேவாக் பேசினார். இதன்மூலம் இந்திய அணியில் பிளவு இருப்பது வெளியே தெரிந்தது. டோனி- ஷேவாக் இடையே ஏற்பட்ட மோதலால் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சியடைந்தது.
இந்த மோதல் விவகாரத்திற்கு பிறகு இருவரும் இணைந்து ஊடகங்களுக்கு அறிக்கை கொடுக்க வேண்டும் என்று கிரிக்கட் வாரியம் வலியுறுத்தியிருந்தது.இந்த அறிக்கையை தோனி படிக்கும் போது, ஷேவாக் அருகில் இருக்க வேண்டும் என்றும் அறிக்கையை படித்த பிறகு இருவரும் ஊடகத்தினரிடம் எந்த கருத்தும் தெரிவிக்கக்கூடாது எனவும் கூறப்பட்டது.
ஆனால் ஷேவாக் கிரிக்கட் வாரியத்தின் இந்த உத்தரவை கேட்க மறுத்துவிட்டார். இதனால் ஷேவாக் மீது கிரிக்கெட் வாரியம் அதிருப்தி அடைந்தது. இதன் காரணமாகவே ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியிலிருந்து ஷேவாக் நீக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.முத்தரப்பு ஒருநாள் போட்டியில் ஷேவாக் மோசமாக விளையாடியது ஒரு பிரச்சினை கிடையாது. அதன் காரணமாக ஷேவாக் நீக்கப்படவில்லை. ஆனால் கிரிக்கட் வாரியத்தின் உத்தரவை மதிக்காததால் நீக்கப்பட்டார் என்று தகவலறிந்த கிரிக்கட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
