

பல்வேறு பொருளாதாரத் தடைகளை சந்தித்து வரும் ஈரானில், நேற்று பார்லிமென்டுக்கான தேர்தல் நடந்தது. இத்தேர்தல், ஈரான் அதிபர் அகமதி நிஜாத் மற்றும் மத குரு அயதுல்லா அலி கமேனி இடையிலான அதிகாரப் போட்டியாக கருதப்படுகிறது.ஈரானின் பார்லிமென்ட், மஜ்லிஸ் என அழைக்கப்படுகிறது. 290 உறுப்பினர்கள் கொண்ட இந்த அமைப்புக்கு, பெரிய அளவில் அதிகார பலம் கிடையாது. எனினும், இச்சபையை தனது கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் அதிபர் அல்லது மத குரு செல்வாக்கு மிக்கவராகத் திகழ வாய்ப்புண்டு.
தற்போதைய நிலையில், இச்சபையில், கமேனியின் ஆதரவாளர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.தனது அணுசக்தி திட்டங்களால், அமெரிக்கா மற்றும் மேற்குலகின் பல்வேறு பொருளாதாரத் தடைகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், ஈரான் இந்த தேர்தலை எதிர்கொள்கிறது.இதுகுறித்து, நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய கமேனி, "நாடு இப்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், நாட்டின் கவுரவம் மற்றும் மரியாதையை காக்கும் விதத்திலும், பாதுகாப்பை வலுப்படுத்தும் விதத்திலும், மக்கள் அதிகளவில் வந்து வாக்களிக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
கடந்த 2009ல் நடந்த அதிபர் தேர்தலில், அகமதி நிஜாத் பெற்ற வெற்றியை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டங்களை அடுத்து, தற்போது, இத்தேர்தல் நடக்கிறது.இத்தேர்தலில், முற்போக்கு சிந்தனை கொண்ட கட்சிகள் ஓரங்கட்டப்பட்டு, பழமைவாதம் பேசும் கட்சிகள் பெரும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
