

கனடாவில் கடை முதலாளி குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் கொண்டாட சென்றதால் வியாபாரத்தை கவனித்த இந்திய இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்தியாவின் பஞ்சாப் மாநில பஞ்சகுலா பகுதியை சேர்ந்தவர் ஹரிவன்ஷ் குப்தா.அவரது மகன் அலோக் குப்தா(27).சண்டிகரில் பள்ளி படிப்பை முடித்து டிஏவி கல்லூரியில் பட்டம் பெற்று நொய்டா ஐசிஐசிஐ வங்கியில் பணியாற்றினார். பிறகு எம்பிஏ படிக்க 6 மாதங்கள் முன் கனடா சென்றார்.
அங்குள்ள கல்லூரியில் படித்த அலோக் குப்தா, பகுதி நேரமாக வான்கோவரின் சர்ரே பகுதியின் பலசரக்கு கடையில் பணியாற்றினார்.கிறிஸ்துமஸ் நாளில் விடுமுறை என்ற போதிலும், முதலாளி குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் கொண்டாட சென்றதால்,கடையை பார்த்துக் கொண்டார்.அப்போது யாரோ குப்தாவை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.இதில் குப்தா படுகாயம் அடைந்தார்.ரத்த வெள்ளத்தில் அவர் சாலையில் ஓடினார்.உதவி கேட்டார்.பக்கத்து வீட்டினர் வந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
எனினும் வழியில் அவர் பலியானதாக டாக்டர்கள் அறிவித்தனர். கிறிஸ்துமஸ் தினத்தில் நடந்த இந்த துப்பாக்கி சூடு பற்றி வான்கோவர் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.எனினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. துப்பாக்கி சூட்டை பார்த்த நேரடி சாட்சிகள் யாரும் இல்லாததால் கொலையாளி ஒருவரா அல்லது கும்பலா, கொள்ளை அடிக்க நடத்தப்பட்டதா என துப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
கல்லூரியிலும் வசிப்பிடத்திலும் நற்பெயர் கொண்ட அலோக் குப்தா சுட்டுக் கொல்லப்பட்டது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
