

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்றும், தனது ஆட்சிக் காலத்தை ஆளுங்கட்சி பூர்த்தி செய்யும் என்றும் அந்நாட்டு பிரதமர் கிலானி தெரிவித்துள்ளார்.தனது சொந்த ஊரான முல்தானில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.திட்டமிட்டபடி 2013-ம் ஆண்டே பொதுத்தேர்தல் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசியலமைப்புச் சட்டப்படியே தனது அரசு இயங்குவதால், அடுத்த பொதுத்தேர்தல் சட்டப்படியே நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது: நாங்கள் ஆட்சியில் நீடிப்பது சிலருக்குப் பிடிக்கவில்லை. அப்படிப்பட்டவர்களே தேர்தல் குறித்துப் பேசி வருகின்றனர். ஆனால் நாங்கள் சட்டப்படியும், அரசியலமைப்புப்படியும் இயங்கி வருவது அவர்களுக்குத் தெரியவில்லை.கருத்தொற்றுமையின் அடிப்படையிலேயே நாடாளுமன்றத்தில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஜனாதிபதி ஆஸிப் அலி ஸர்தாரியுடனும், ராணுவத் தலைமைத் தளபதி பர்வேஸ் கயானியுடனும் சுமூகமான உறவு நிலவுகிறது.
கயானியை 3 வருட பதவி நீடிப்பில் இருக்கும்படி கடந்த ஆண்டு நான் கெஞ்சியதாக வந்த தகவலில் உண்மையில்லை. உருது மொழியி நான் தெரிவித்த கருத்துகளை, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசு ஸ்திரமாக உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் பூர்த்தி செய்யப்படவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மேலவைத் தேர்தலை சீர்குலைக்கவே, பொதுத்தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வேண்டும் என்ற கூக்குரல் எழுப்பப்படுகிறது.அமெரிக்கா மற்றும் நேட்டோ குறித்து மறுசீரமைக்கப்பட்ட கொள்கைகளை நாடாளுமன்றம் அங்கீகரிக்கும். அமெரிக்காவுடனான உறவுகள் குறித்த பரிந்துரைகளை தேசியப் பாதுகாப்புக்கான நாடாளுமன்றக் குழு தயார் செய்கிறது.
அது குறித்து நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழுவில் விவாதிக்கப்படும். ஸ்திரமான, வலிமையான ஆப்கானிஸ்தான் அமைவதையே பாகிஸ்தான் விரும்புகிறது. அந்நாட்டுடன் நட்புறவையே நாங்கள் விரும்புகிறோம்.பஞ்சாபில், செராய்கி மாகாணத்தை உருவாக்குவதில் கூட்டணிக் கட்சிகளுடன் கருத்தொற்றுமை எட்டுவதில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியினால் எவ்வித ஆபத்துமில்லை. இது போன்று ஒரே இரவில் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் ஒரே இரவிலேயே காணாமல் போய்விடும் என்றார் கிலானி.
