

லோக்பால் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படுவதை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. இதற்காக அந்த கட்சி செய்த தந்திரங்களை மக்களிடம் கொண்டு செல்ல நாடு முழுவதும் ஒரு வாரத்திற்கு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என பா. ஜ. கட்சி கூறியுள்ளது.
இதுதொடர்பாக,அந்த கட்சியின் தகவல் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ராஜ்யசபாவில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதியாக செயல்படவில்லை.அதனால்,மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மசோதா நிறைவேற்றப்படாமல் இருப்பதற்காக காங்கிரஸ் கட்சி செய்த தந்திரங்களை மக்களிடம் வெளிப்படுத்த 'ஜனநாயகத்தைக் காப்போம்,காங்கிரசை நீக்குவோம்' என்ற பெயரில் ஒரு வாரகால பிரசாரத்தை பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் மேற்கொள்ளும்.
மசோதா கேலிக்கூத்தான விவரங்கள் மக்களிடம் எடுத்துரைக்கப்படும்.லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதில், காங்கிரஸ் கட்சிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், அந்த கட்சி திரிணமுல் காங்கிரசுடனும், மற்ற கட்சிகளுடனும் பேசியிருக்க வேண்டும். ஆனால், மசோதாவை நிறைவேற்ற ஆர்வமில்லாததால், அவர்கள் இதையெல்லாம் செய்யவில்லை. இவ்வாறு, நிர்மலா கூறினார்.
