

சீனாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 13 இந்திய வைர வியாபாரிகள் விரைவில் நாடு திரும்ப உள்ளனர்.சீனாவில் கடந்த ஆண்டு ஹாங்காங் வியாபாரிகளிடமிருந்து முறைகேடாக வைரத்தை பெற்று அதை குவாங்சு மாகாணத்தில் விற்க முயன்ற போது 22 இந்தியர்களை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
37 கோடி ரூபாய் பெறுமானமுள்ள வைரங்களை கடத்தியதாக இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆறு ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது.இவர்களை விடுவிக்க கோரி மத்திய அரசு மற்றும் குஜராத் அரசின் சார்பில் சீன அரசிடம் வற்புறுத்தப்பட்டது.
இதைதொடர்ந்து 13 பேரின் தண்டனை காலம் குறைக்கப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப சீன கோர்ட் கடந்த 8ம் தேதி உத்தரவிட்டது.குஜராத் மாநிலத்தை சேர்ந்த 13 பேரையும் தாயகத்துக்கு திருப்பி அனுப்ப குவாங்சு மாகாணத்தில் உள்ள இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விமானத்தில் 13 பேருக்கும் சீட் கிடைத்ததும் அவர்கள் இந்தியாவுக்கு உடனடியாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என குவாங்சுவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி இந்திராமணி பாண்டே தெரிவித்துள்ளார்.