லண்டனில் ஒலிம்பிக் திருவிழா இன்று தொடங்குகிறது.இந்த திருவிழா ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வரை நடக்கிறது.204 நாடுகளை சேர்ந்த 10,490 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்கின்றனர். மொத்தம் 26 பிரிவுகளில் 304 போட்டிகள் நடக்கின்றன.தொடக்கவிழா மிக பிரமாண்டமாக நடக்கிறது. புகழ்பெற்ற பாலிவுட் இயக்குனர் டேனிபாய்ல் தலைமையில் இசை நிகழ்ச்சி நடக்கிறது.
ஏ.ஆர். ரகுமான், ரிக்ஸ்மித் கர்ல்ஹைடே உள்ளிட்ட புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.ஒலிம்பிக் ஜோதி ஏற்றி வைக்கப்பட்ட பின்னர் போட்டிகளை ராணி எலிசபெத், இளவரசர் பிலிப் முறைப்படி தொடங்கி வைக்கின்றனர்.தொடர்ந்து ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெறும்.ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் அறிவிக்கப்பட்டுள்ள வீரர் தங்களது நாட்டு கொடியை ஏந்தி வருவார்.
தொடக்கவிழா நடைபெறும் மைதானத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் அமரலாம். ஒலிம்பிக் போட்டி பாதுகாப்புக்காக 12 ஆயிரம் பொலிசார் நகர் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.இதுதவிர 7500 இராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.மேலும் 5 ஆயிரம் அதிரடிப்படை வீரர்கள், வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் 1000 நிபுணர்கள், இதுதவிர 13 ஆயிரம் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள், 3000 சமூக ஆர்வலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஒலிம்பிக் போட்டிகளுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் உள்ளதால் வான்வெளியில் எப்போதும் சுற்றிவரும் வகையில் ரோந்து விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இதுதவிர கடல்வழி பாதுகாப்பும் பலபடுத்தப்பட்டுள்ளது.ஆயுதங்கள் தாங்கிய கப்பல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.லண்டன் நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு தொடக்கவிழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன. தொடக்க நாளில் வில்வித்தை போட்டிகள் மட்டும் நடக்கிறது. மற்ற போட்டிகள் 28ஆம் திகதி தொடங்குகின்றன.