

கனேடிய அரசினால் குடிவரவு சட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றங்களால் கனடாவிற்குள் வரும் அகதிகள் பலர் சிறையில் தமது வாழ்நாளைக் கழிக்க வேண்டிய நிலைமை உண்டாகியுள்ளது. அரசின் புதிய சி-31 சட்டமூலத்தின் படி இனிவரும் காலங்களில் ஆட்கடத்தல் மூலம் கனடாவிற்குள் வந்தவர்களாக சந்தேகிக்கப்படும் அகதிகளின் கோரிக்கைகள் எவையும் பரிசீலிக்கப்படாது.
உடனடியாக அவர்களை கனேடிய சிறைகளில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கனடிய குடிவரவு அமைச்சர் ஜோசன் கென்னி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக நேற்று ஊடகமொன்றிற்கு அளித்த நேர்காணலில் அமைச்சர் கென்னி மேலும் கூறுகையில், ஆட்கடத்தல் மூலம் பெரும் குழுக்களாக நாட்டிற்குள் வருபவர்களால் பொது பாதுகாப்பிற்கு இடையூறு ஏற்படுவதால் அவர்களை அகதிகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் புதிய சட்ட மூலத்தின் படி எதிர்காலத்தில் அகதிகள் குழுக்களாக கனடா வந்தால் அவர்களை விசாரிக்கும் அதிகாரம் பொதுப் பாதுகாப்பு அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆட்கடத்தல் மூலமாக நாட்டிற்குள் வந்ததாகக் சந்தேகிக்கப்படுவோருக்கும் இது பொருந்தும் எனவும் விளக்கமளித்துள்ளார். அதே நேரத்தில் தங்கள் சொந்த முயற்ச்சியில் தனியாக கனடா வரும் அகதிகள் வேறு விதமாகவே பிரித்துப் பார்க்கப்படுவர் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.அகதிகளாக நாட்டிற்குள் வருபவர்களை ஏற்றுக் கொள்ளும் ஒரு சிறந்த நாடு கனடா என உலகில் பெரும்பான்மையானவர்களால் புகழப்படும் நிலையில் தற்போதைய அரசின் சட்ட திருத்தங்கள் மூலம் அதனை மாற்ற முற்படுவது மனித உரிமைகளை மதிக்காமல் செயல்படுவது போன்று உள்ளதாக எதிர்க் கட்சியினரும், பல் துறைசார் நிபுணர்களும் விமர்சித்துள்ளனர்.
ஒட்டு மொத்தமாக கனடா முழுவதிலும் உள்ள பல்வேறு அமைப்புக்களும் அகதிகளாக வருவோரிடம் அரசு நடந்து கொள்ளும் விதம் சட்ட விரோதமானது எனக் குற்றஞ்சாட்டியுள்ளதுடன் தங்களின் கடுமையான எதிர்ப்பினையும் வெளிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
