இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொலை வழக்கு தொடர்பாக, முன்னாள் அதிபர் முஷாரப்பை கைது செய்யும்படி, சர்வதேச போலீசாருக்கு, பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ, 2007ல் படுகொலை செய்யப்பட்டார். அப்போது அதிபராக இருந்த முஷாரப், பெனசிருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கத் தவறி விட்டதாக, பாகிஸ்தான் கோர்ட் குற்றம் சாட்டி, அவரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது முஷாரப், துபாய் மற்றும் பிரிட்டனில் வசித்து வருகிறார். அவர் நாடு திரும்பினால், உடனடியாக கைது செய்யப்படும் சூழல் உள்ளது.
இதற்கிடையே, அவரை கைது செய்யும்படி, சர்வதேச போலீசாருக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் சட்ட வல்லுனர் ஒருவர் குறிப்பிடுகையில்,"இன்டர்போலுக்கு கடிதம் அனுப்பியதன் மூலம் முஷாரப்பை கைது செய்து விட முடியாது. பிரிட்டனுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கைதிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம், இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. முஷாரப்பை, பாகிஸ்தான் தேடுகிறது என்பதைத் தான் இன்டர்போல் கடிதம் வலியுறுத்துமே தவிர, அவரை கைது செய்ய வழிவகுக்காது' என்றார்.