

ஐரோப்பாவிலேயே ஜேர்மனியில் தான் அதிகளவு பாலின வேறுபாடு காணப்படுவதாக OECD என்ற பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பு நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.OECD என்ற பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பினைச் சேர்ந்த 34 நாடுகளுள் இந்தப் பாலின வேறுபாடு சராசரியாக 16 சதவிகிதமாக இருக்கும் போது, ஜேர்மனியில் மட்டும் அதிகமாக இருப்பது தற்போதைய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஜேர்மனியில் பொதுத்துறையில் இந்த வேறுபாடு மிக அதிகமாக உள்ளது, அதாவது ஆண்களை விடப் பெண்கள் 23 சதவிகிதம் குறைவாக ஊதியம் பெறுகின்றனர்.ஜேர்மனியில் மேலாண்மைப் பணிகளில் பெண்களின் நியமனம் குறைவாக உள்ளது. அனைத்துலக நாடுகளோடு ஒப்பிடும் போது பெண்களின் பணியும், பங்கும் ஜேர்மனியில் மிக மிகக் குறைவு.
அந்நாட்டின் மேலாண்மை அமைப்புகளில் பெண்கள் வெறும் 3 சதவிகிதம் மட்டுமே உள்ளனர். ஐரோப்பாவில் இதுவே மிகக் குறைந்த எண்ணிக்கையில் அமைந்த நாடாகும்.அமெரிக்கா, ரஷ்யா, மெக்சிகோ, ஜப்பான் போன்ற நாடுகளில் கூட மேலாண்மைப் பொறுப்புகளில் கூடுதலான எண்ணிக்கையில் பெண்கள் காணப்படுகின்றனர்.
பெண்களுக்கு அதிக எண்ணிக்கையில் பணிகள் வழங்க வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் வலியுறுத்துகின்றது. ஆனால் ஜேர்மனி இதற்கான நடவடிக்கைகளை இதுவரை மேற்கொள்ளவில்லை.
