

குளக்கரையிலோ ஆற்றங்கரையிலோ குளித்த அனுபவமுள்ளவர்களுக்கு, மீன்கடி அனுபவமும் நிச்சயம் இருக்கும்.கிச்சுகிச்சு மூட்டுகிற மாதிரி கால்களைச் சூழ்ந்து கொள்ளும் மீன்கள்,குளிக்கிறவர்களின் உடம்பிலுள்ள அழுக்குகளைத் தின்று,சருமத்தை சுத்தமாக்குவதுதான் அந்த மீன்களின் வேலை.
ஆற்றுத் தண்ணீரில் கால் வைத்தால் மீன் கடிப்பதும், கால்களில் உள்ள அழுக்கு நீங்கி சுத்தமாவதும் எல்லோருக்கும் தெரிஞ்சதுதான். அந்த அடிப்படையில் செய்யப்படுவதுதான் Fish Pedicure.இதுக்காக உபயோகிக்கப்படும் குரா ரூஃபா மீன்களுக்கு டொக்டர் ஃபிஷ்னு ஒரு பெயர் இருக்கிறது.இந்த மீன்களுக்கு, சரும நோய்களை குணப்படுத்தும் சக்தி உண்டு என்பதை பல வருடங்களுக்கு முன்பே கண்டுபிடித்திருக்கிறார்கள்.
செய்யும் முறை
ஒரு கண்ணாடித் தொட்டிக்குள் கூழாங்கற்களும், மணலும் நிரப்பி, அதன் மேல் பளிங்கு மாதிரி தண்ணீர். அதற்குள் தங்கமும், பழுப்பும் கலந்த குரா ரூஃபா மீன்கள்.அந்தத் தண்ணீருக்குள் 20 நிமிடங்கள் கால்களை வைக்க வேண்டும். கால் வைத்ததுமே மீன்கள் சூழ்ந்து கொண்டு, கிச்சுக்கிச்சு காட்ட ஆரம்பித்து விடும். அதாவது மீன்கள் தமது சிகிச்சையை ஆரம்பித்து விடும்.நக இடுக்கு, குதிகால் ஓரங்கள், விரல் நுனிகள், பாதங்கள் என எல்லாப் பகுதிகளையும் சூழ்ந்து கொண்டு, சுத்தப்படுத்திய பிறகு, தாமாகவே மீன்கள் விலகிவிடுகின்றன.
வழக்கமாக பெடிக்யூரில் கைகளால்தான் கிளீனிங்கும், ஸ்க்ரப்பிங்கும் செய்வார்கள். ஃபிஷ் பெடிக்யூரில், அந்த வேலையை மீன்களே செய்து விடுவதுதான் ஹைலைட்.முழு சிகிச்சையும் முடிந்ததும், ரோஜா நிறத்தில் பட்டு போல அழகாக மாறிவிடுகின்றன கால்கள்.
