

பாகிஸ்தான் அணிக்கு எதிரான '20-20' போட்டியில், 5 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்ற இங்கிலாந்து, கோப்பை வென்றது.இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதிய மூன்றாவது "20-20' போட்டி, அபுதாபியில் நடந்தது. "டொஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பிராட், பட்டிங் தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணிக்கு கீஸ்வெட்டர் (17) சுமாரான ஆரம்பம் கொடுத்தார். போபரா (1), மார்கன் (9), பெர்ஸ்டவ் (3), பட்டர் (7) ஒற்றை இலக்க ரன்களில் திரும்பினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்த போதும், உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பீட்டர்சன், அரைசதம் அடித்தார். சமித் படேல் 16 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டும் எடுத்தது. பீட்டர்சன் (62) அவுட்டாகாமல் இருந்தார்.
"திரில்' வெற்றி: போகிற போக்கில் எட்டிவிடும் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு, ஹபீஸ் "டக்' அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். ஜியா 23, ஆசாத் சபிக் 34 ரன்கள் எடுத்தனர். உமர் அக்மல் (22) நிலைக்கவில்லை. கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.
டெர்ன்பாக் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் 2 ரன், இரண்டாவது பந்தில் 1 ரன், அப்ரிதி (3) ரன் அவுட்டானார். அடுத்த 3 பந்துகளில், 4 ரன்கள் எடுக்க, கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை. பந்தை எதிர்கொண்ட கேப்டன் மிஸ்பா (28) போல்டாக, இங்கிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது.இதையடுத்து 2-1 என தொடரை வென்ற இங்கிலாந்து அணி கோப்பை வென்று அசத்தியது.
