

.jpg)
அசோக்கேணி தயாரிக்க, ஏ.கே.கே.எண்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் தமிழ், தெலுங்கு, கன்னடம், என மூன்று மொழிகளில் தயாரிக்கும் படம் “பிரசாத்”.இந்தபடத்தில் அர்ஜூன் கதாநாயகனாக நடிக்கிறார். இது அவர் நடிக்கும் 150வது படமாகும். கதாநாயகியாக மாதுரி பட்டாச்சார்யா நடிக்கிறார். இவர்களுடன் ராமகிருஷ்ணா, சமா கிருஷ்ணா, சைலஜா சோமசேகர், ரமேஷ்பட் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சங்கல்ப் என்ற சிறுவன் நடிக்கிறார்.
கதைப்படி காது கேட்காத, வாய்பேச முடியாத சிறுவன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் சங்கல்ப், நிஜத்திலும் வாய்பேச முடியாத சிறுவன். படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருப்பதாக அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.தனது 150வது படம் குறித்து மனம் திறந்துள்ளார் அர்ஜூன். அவர் கூறியுள்ளதாவது, எனக்கு மிகவும் திருப்தி தந்த படம் பிரசாத். வழக்கமான சினிமா பார்முலாவை ஒதுக்கி வைத்துவிட்டு கதைக்குள் மட்டுமே நம்மை யதார்த்தமாக அழைத்து செல்லும் படமாக இந்தபடம் அமைந்துள்ளது.
படம் பார்க்கிற ஒவ்வொருவரும் நிச்சயமாக அழுதுவிட்டு தான் செல்வார்கள். அந்தளவுக்கு படத்தின் கதையோட்டம் இருக்கும்! சங்கல்ப் அனைவரையும் அழவைத்து விடுவான். சாதாரண மெக்கானிக்கான நான், நமக்குன்னு ஒரு ஆண் குழந்தை பிறந்தால், வளர்ந்து ஆளாகி நமது கஷ்டத்தை எல்லாம் போக்கி விடுவான் என்று கனவுகளோடு இருப்பேன்.எனது ஆசைப்படியே மகன் பிறப்பான். பிறந்த குழந்தை வாய்பேச முடியாத, காது கேட்காத குழந்தைகயாக பிறந்து விடுகிறது. அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பது சென்டிமென்ட் கதையோட்டம்.
பொதுவாக நான் சண்டைகாட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். ஆனால் இந்தப்படத்தில் துளியளவு கூட ஆக்ஷ்ன் கிடையாது. டூயட்டும் கிடையாது.இந்தப்படம் பெர்லின் பிலிம் பெஸ்டிவலில் கலந்து கொண்டது. பலரும் பாராட்டி இப்படியொரு படம் நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டும் என்று பாராட்டு மழை பொழிந்தனர். அத்தோடு படத்திற்கு இளையராஜாவின் இசையும் பக்க பலமாக அமைந்திருக்கிறது என்றார்.
