

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியிலிருந்து சேவாக், ஜாகிர்கான் உட்பட சில வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.ஆசிய கிண்ண கிரக்கட் தொடர் டாக்காவில் வரும் 11ம் திகதி முதல் 22ம் திகதி வரை நடைபெற உள்ளது. இத்தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரிய தெரிவு குழுவினர், ஆசிய கிண்ண கிரிக்கட் தொடருக்கான இந்திய வீரர்களை இன்று மும்பையில் தெரிவு செய்தனர்.இத்தெரிவில் இந்திய அணியில் இருந்து சேவாக், ஜாகீர்கான், உமேஷ் யாதவ் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.மனோஜ் திவாரி, யூசுப் பதான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் நட்சத்திர துடுப்பாட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் அணியில் இடம் பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடந்து வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய சேவாக் வெறும் 65 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். இதனாலேயே சேவாக் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.ஆனால் சச்சின் அணியில் இடம் பெறுவது சந்தேகமாக இருந்து வந்தது. ஏனென்றால் சச்சின் முத்தரப்பு கிரிக்கட் தொடரில் மொத்தமாக 100 ஓட்டங்களை கூட எட்டவில்லை.
100வது சத சாதனையை நிகழ்த்தும் கனவுடன் இருக்கும் சச்சினுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.அணி விபரம்: தோனி(அணித்தலைவர்), வீராத் கோஹ்லி(துணை அணித்தலைவர்), சச்சின் டெண்டுல்கர், கெளதம் கம்பீர், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, மனோஜ் திவாரி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பிரவீண்குமார், வினய்குமார், ராகுல் சர்மா, யூசுப் பத்தான், இர்பான் பத்தான், அசோக் திண்டா.
